“ரவி, உனக்கு இந்த தாடி சூப்பரா இருக்குடா! ஜீனியஸ் மாதிரி தெரியுது! இப்படியே மெயின்டெயின் பண்ணு!” சொன்னது கவிதா என் உயிர் காதலி!

“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என்றேன்.

“பாராட்டினதுக்கு ட்ரீட்டா? பெரிய கப்பா வாங்கிட்டு வா? சின்ன ஐஸ்கிரீம் கொடுத்து நக்க விட்டுற போறே!” என்றாள்.

சொல்லிக் கொண்டிருந்தபோதே, சிலுசிலுவென்று சாரல் அடிக்க, “வர்றியா, உள்ள போய் உட்கார்ந்துகலாம்?” என்றேன்.

“ஏன் இருடா! எவ்வளவு நல்லா இருக்கு. ரசிக்கத் தெரியாத முண்டமா இருக்கியே, உன்னைய போய் லவ் பண்றேன் பாரு!” என்று கையை பிடித்து இழுத்து சாரல் தெறிப்பில் உட்கார வைத்தார்கள்.

பிறகு ஒருநாள்…

“ரவி முதல்ல இந்த தாடியை எடுப்பா! பிச்சைக்காரன் மாதிரி இருக்கு! என்றாள்.

“ஐஸ்கிரீம் சாப்பிட்டாயா?” என்றேன். “வேணாம் ராத்திரி 12 மணிக்கு பைத்தியக்காரன் தான் ஐஸ்கிரீம் தின்பான்!” என்றாள்.

அன்றைய தினம் போலவே சாரல் மழை!

“ஹேய்… மழை பெய்யுது உறைக்கவே இல்லையா?” என்றாள்.

“இல்லை இது நல்லா இருக்கு!”

“நாளைக்கு ஆபீஸ் இருக்கு, தெரியுமில்லே? ஜுரம் வந்து படுத்தா, யார் இங்கே அவதிப்பட்றது? முதல்ல எழுந்து உள்ள வா!”

என்ன ஆச்சு கவிதாக்கு? வேற ஒன்னும் இல்லை… கல்யாணம் ஆயிடுச்சு எனக்கும் அவளுக்கும்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *