நடிகை மீனா குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள். குழந்தை அவள் பிடியில் அகப்படாமல் ஓடி ஓடி போயிற்று. மீனா அதன் பின்னாலே ஓடிப்போய், கெஞ்சி கெஞ்சி சோறு ஊட்டினாள். “டேய் கண்ணா! ஓடாதடா… என் செல்லம் இல்ல, சமத்தா சாப்பிடணும்” என்று அவன் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே, கட்… கட்… என்றார் டைரக்டர்.
“என்னம்மா… இதோட நாலு டேக் ஆயிடுச்சு. உன் முகத்தில் ஒரு தாய்க்கு உண்டான பாசம் வரலையே! எக்ஸ்பிரஷன் சரியா இல்லை. லேசா கோபம் தெரியுது. குழந்தை என்னதான் குறும்பு பண்ணினாலும், உன் முகத்தில் உள்ள அன்பு துளியும் மாறக்கூடாது. சரியா?”
“ஓகே. சார்… இப்போ கரெக்டா பண்ணிடுறேன்!”
ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தால் மீனா. அவளது இரண்டு வயது குழந்தை வேலைக்காரியின் மடியில் உட்கார்ந்து சமத்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தது!…