ஒரு மாதம் ஆகியும் இருவரும் வேலைக்கு வரவில்லை என்பதை தெரிந்து கொண்ட சக ஊழியர்கள் இருவரையும் நேரில் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு செல்லலாம் என்பதற்காக வந்திருந்தனர்.
வரவேற்று உட்கார வைத்து அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவதற்காக எழுந்து உள்ளறைக்கு போன போது ஒருவர் முணுமுணுத்து சொன்னது காதில் விழுந்தது.
இருவரும் திருமணமாகி ஒரு வருட காலம் தனிமையாகவே வாழ்ந்தனர். அவர்களின் அன்பிற்கு சாட்சியாக ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தனர். ஆனால் பரிதாபம் பிறந்த இரண்டு மணி நேரத்திலேயே அது இறந்து போய்விட்டது. சோகம் தாங்காமல் இருவரும் பித்து பிடித்தது போல் வீட்டில் முடங்கி கிடந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இருவரும் வேலைக்கு போகவில்லை.
ராமுவும் ஜானுவும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் குடும்பத்தினர்களை எதிர்த்துக்கொண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையின் பிரிவு இவர்களை இவ்வளவு சோகத்தில் தள்ளிடுச்சு! 20 வருஷம் இவர்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய இவுங்க பெற்றோருக்கு மிகப்பெரிய வேதனையாக இருக்கும்!.
இதனை கேட்ட ராமு, ஜானு தம்பதிகள் கண்ணில் இருந்து நீராக முடிந்தது குற்ற உணர்ச்சி!…