லைக்
கணவன் மனைவி இருவரும் நடுத்தெருவில் இறங்கி நின்று சண்டை போட்டுக் கொண்டனர், ‘ஏன் என் போட்டோவுக்கு லைக் போடவில்லை’ என்று.
மதிப்பாய்வு
படம் நல்லா இல்லை என விமர்சனம் செய்த வலைதள விமர்சகரின் வீடியோவை நல்லா இருக்கு என ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் லைக் செய்தனர்.
நேர்மை
லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியின் உடல், ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தகவல்
இன்டர்நெட் கட்டணம் அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அனைவரும் டேட்டாவை ஆஃப் செய்யுங்கள் என அனைவருக்கும் தகவல் தெரிவித்தான். வாட்ஸ் அப்ல்.
வாக்கு? வசவு?
“சரியா படிக்கலைன்னா மாடு தான் மேய்க்கணும்” என அப்பாவிடம் சிறுவயதில் திட்டு வாங்கியதை நினைத்துப் பார்த்தான், பால் பண்ணை வைத்திருக்கும் தங்கராசு.
கண்டக்டர்
“தினமும் 3 கிலோ மீட்டர் நடந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வராது” என சொன்ன டாக்டரிடம், “சார் நான் அரசு பஸ் கண்டக்டர்” என பரிதாபமாய் சொன்னார்.
ரீமேக்
“நான் பதிவு செய்த படத்தின் தலைப்பை திருடி விட்டார்” என கோர்ட்டில் வாதிட்டார் ரீமேக் இயக்குனர்.
வீணாக்காதீர்
“தண்ணீரை வீணடிக்காதீர்கள்” என கடிந்து கொண்டார். வழி முழுவதும் தண்ணீரை கொட்டிக்கொண்டே வந்த தண்ணீர் லாரி டிரைவர்.
பொறுப்பு
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்மென தேர்தல் விழிப்புணர்வு செய்த நடிகர், தேர்தல் நாள் அன்று வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார்.
அருமை
“சாப்பாடு அருமை. சமையல் மாஸ்டர் யாருப்பா?” என கேட்டவரிடம், “மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு போய் இருக்கிறார்” என்று பதில் அளித்தார் சப்ளையர்.